சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்

இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் இன்று முதல் அனைத்து கிராமங்களிலும் நடக்கிறது

Update: 2023-03-09 18:45 GMT

விழுப்புரம்

இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல்

தற்போது நாடு முழுவதும் இன்புளுயன்சா 'ஏ' வைரஸ் தொற்றின் காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் "சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்" அனைத்து கிராமங்களிலும் நடமாடும் மருத்துவக்குழுவின் மூலம் நடைபெற உள்ளது. இன்புளுயன்சா 'ஏ' வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல் போன்ற நோய் அறிகுறிகளை உண்டாக்கும். பெரும்பாலும் இவ்வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் அறிகுறி அவரவர் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து தானாகவே குணமடைகிறது. எனினும் சிலர் நிமோனியா போன்ற கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும்.

சிறப்பு முகாம்

இன்புளுயன்சா 'ஏ' வைரசால் ஏற்படும் காய்ச்சலின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தொண்டை வலி, சோர்வு மற்றும் பலவீனம், தசைவலி, குளிர் மற்றும் வியர்வை, தலைவலி மற்றும் கண் வலி போன்ற பாதிப்புகள் இருக்கும். எனவே பொதுமக்கள் கூட்டமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து, அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி இக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்