சிறப்பு தொழில் கடன் முகாம்
சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக்கழகமாகும். இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது. இதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் பிராமினேட் ரோடு கே.ஆர்.டி. பில்டிங்கில் 2-வது தளத்தில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய-மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்பட உள்ளது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த புதிய தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2460498, 4030028 என்ற தொலைபேசி எண்களையும், 9443110899, 9444396815 என்ற செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.