மூதாட்டி கொலையில் தனிப்படை கேரளா விரைவு

மூதாட்டி கொலையில் தனிப்படை கேரளா விரைவு

Update: 2022-09-12 16:57 GMT

கோவை, 

மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை தேடி தனிப்படை கேரளாவுக்கு விரைந்துள்ளது.

மூதாட்டி கொலை

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (வயது 65). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுடைய ஒரே மகன் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டார். இதனால் மூதாட்டி மயிலாத்தாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் மூதாட்டி மயிலாத்தாள் சம்பவத்தன்று கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நகைக்காக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்றும், மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படை கேரளா விரைந்தது

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொலை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மூதாட்டி மயிலாத்தாள் தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் யாரும் காணாமல் போய் உள்ளனரா? என்று விசாரணை நடைபெறுகிறது. சமையல்காரர் ஒருவர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை தேடி தனிப்படையினர் கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, மூதாட்டி கொலையில் துப்புதுலங்கி உள்ளது. கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்தார்.

----

Reporter : M.ABULKALAMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

Tags:    

மேலும் செய்திகள்