வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் அமைத்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-11-16 23:44 GMT

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உயிரியல் பூங்காக்களின் பங்கு

மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் 147 பெரிய உயிரியல் பூங்காக்கள் உள்ளன. அவற்றில் மேலாண்மை, செயல்திறன், மதிப்பீடு ஆகியவற்றின்கீழ் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது. நமது விலங்குகளுக்கும், பார்வையாளர்களுக்கும் சிறந்த வசதிகளை தொடர்ந்து வழங்க வேண்டும். வண்டலூர் உயிரியல் பூங்கா, உலகத்தரம் வாய்ந்த சில உயிரியல் பூங்காக்களில் ஒன்று.

விலங்குகள் முழுமையான இயற்கை சூழலில் வாழ்வதற்கு ஏற்றாற்போல் இந்த பூங்கா இயற்கையாகவே அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். உயிரியல் பூங்காக்கள், விலங்குகளை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவதை தவிர, அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிகவும் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளுக்கும், உயிரியல் பூங்காக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

நீண்ட கால திட்டம்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, குறிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஆகியோர் பூங்காவின் மேம்பாட்டிற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயற்கை வளங்களின் சிறந்த மற்றும் அதிகபட்ச பயன்பாட்டை ஒருங்கிணைத்து மத்திய உயிரியல் பூங்கா ஆணைய விதிகளின்படி நீண்ட காலத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மேலாண்மை நடைமுறைகள், சிறந்த பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பரிமாற்ற திட்டங்களை வகுக்க வேண்டும்.

உயிரியல் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவது மட்டுமின்றி, வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்துகொள்ள இயலும். உயிரியல் பூங்காக்களுக்கு வருகை தரும் வயதானவர்கள், சிறுவர்களுக்கு தேவையான வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்

உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளப்பாதைகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓய்வு அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும் பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகவல் சாதனங்கள் ஆகிய வசதிகள் உருவாக்கப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவை தவிர, வேலூர் மாவட்டம் அமிர்தியிலும், சேலம் குரும்பப்பட்டியிலும் தமிழ்நாடு அரசு உயிரியல் பூங்காக்களை அமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைவரும் முனைப்பான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்