மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் - பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்

Update: 2022-07-30 13:40 GMT

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி முன்னிலை வகித்தார்

இந்த முகாம் பல்வேறு அரசு துறைகள் இணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த முகாமில் 338 பேர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.

இதில் 76 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வங்கிக்கடன் விண்ணப்பங்கள் பரிந்துரை மற்றும் ஆலோசனை 64 பேருக்கும், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 32 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் 10 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 15 மாற்றுத் திறனாளிகளுக்கு பணிநியமன ஆணை அளிக்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களை இணைய தளத்தில் பதிவு செய்வதற்காக முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் உதவி கலெக்டர் வெற்றிவேல், தாட்கோ மேலாளர் ஏழுமலை, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் வசந்த்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்