10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியதால் பரபரப்பு
ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் குடியரசு தினத்தன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1,600 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றபோது மாடியில் வகுப்பறைகளில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கணித பாடம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. விழாவில் அந்த மாணவ, மாணவிகளை கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடியரசு தின விழா அன்று மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட விவகாரம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.