தூத்துக்குடி மாநகரில் சிறப்பு மையங்கள்-யேமர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகரில் சிறப்பு மையங்களை யேமர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-20 19:00 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 'என் வாழ்க்கை என் சுத்தமான நகரம்' என்ற தலைப்பின் கீழ் சிறப்பு மையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையத்தின் முக்கிய நோக்கம் டிரிபிள் ஆர் என்று சொல்லக்கூடிய, தேவையற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்தல், வாங்கிய பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் என்பதன் அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் மேயர் என்.பி. ஜெகன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மாநகர் நல அலுவலர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், நுண் உரம் செயலாக்க மையங்கள், ராஜாஜி பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, ஸ்டேட் பேங்க் காலனி பூங்கா, எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு பூங்கா, முத்து நகர் கடற்கரை பூங்கா, கால்டுவெல் காலனி பூங்கா, சிவன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபம் என 22 இடங்களில் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி வரை செயல்படும்.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை மேயர் என்.பி. ஜெகன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டு உள்ள உறைகிணறு, கலியாவூர் நீரேற்று நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தூத்துக்குடி மாநகர மக்களுக்கு ஒரு சில இடங்களில் தினசரியும், மீதமுள்ள இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைகாலத்திலும் முடிந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது வரை மழை இல்லாததால் மேலும் ஒரு நாள் தாமதமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து வல்லநாடு நீரேற்று நிலையம், உறைகிணறு ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி கூடுதல் நீர் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்