நதிநீர் இணைப்பு திட்டம்: கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க சிறப்பு முகாம்கள்
நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை வழங்க சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
4-ந் தேதி முதுமுத்தான்மொழி, தோட்டாக்குடி, பொன்னாக்குடி, முனைஞ்சிப்பட்டி, கஸ்தூரிரெங்கபுரம், விஜயநாராயணம் ஆகிய கிராமங்களுக்கும், 5-ந் தேதி குறவர்குளம், உருமன்குளம் ஆகிய கிராமங்களுக்கும், 6-ந் தேதி மேலசேவல், ஆழ்வாநேரி, திடியூர், ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம், இலங்குளம் ஆகிய கிராமங்களுக்கும், 7-ந் தேதி சிந்தாமணி, கோவன்குளம் ஆகிய கிராமங்களுக்கும், 11-ந் தேதி கொழுமடை, அ.சாத்தான்குளம், செங்குளம், காடன்குளம் திருமலாபுரம், விஜயநாராயணம், திசையன்விளை ஆகிய கிராமங்களுக்கும் நடக்கிறது.
12-ந் தேதி மேலத்திரியூர், திருவம்பலாபுரம் ஆகிய கிராமங்களுக்கும், 13-ந் தேதி பிரான்சேரி, மூலைக்கரைப்பட்டி, புதுக்குளம், ராமகிருஷ்ணாபுரம், குமராபுரம் கிராமங்களுக்கும், 14-ந்தேதி தெற்குவீரவநல்லூர், மூலைக்கரைப்பட்டி, தருவை, காடன்குளம், திருமலாபுரம், விஜய நாராயணம், இட்டமொழி ஆகிய கிராமங்களுக்கும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலங்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே தொடர்புடைய பட்டாதாரர்கள், பட்டாநகல், வில்லங்க சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம் வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில் இறப்புச்சான்றிதழ் மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தகங்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி சரியான ஆவணங்களை சமர்ப்பித்து இழப்பீட்டுத்தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இறப்பு சான்று, வாரிசு சான்று, பட்டா நகல் தேவைப்படுவோர் உரிய அசல் ஆவணங்களுடன் வந்தால் சான்றுகள் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உரிய சான்றுகள் விரைந்து வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.