பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் அரியலூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 6 பள்ளிகளில் நடைபெறுகிறது.

Update: 2023-06-15 18:59 GMT

சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சேருவதற்கான சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி கூறியதாவது:-

கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான சாதிச்சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய் சான்று மற்றும் தேவையான இதர சான்றுகள் பெரும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட 6 ஒன்றியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

6 பள்ளிகளில் நடக்கிறது

பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நல்லதொரு அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான சான்றுகளை பெற்று பயனடைய வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அதன்படி சிறப்பு முகாம்கள் ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர் ஒன்றியத்தில் அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, செந்துறை ஒன்றியத்தில் செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தா.பழூர் ஒன்றியத்தில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதனை பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், முகாமிற்கு வரும் மாணவர்கள் தங்களுடைய தேவையான ஆவணங்களை (ஆதார்கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள்) உடன் எடுத்து வர வேண்டும். இம்முகாம் சிறப்பாக நடைபெறும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்