கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி, நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்த பொதுமக்கள், ஆதார் எண்ணை கொடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டனர்.
இதில் ஆதார் எண் இல்லாத பொதுமக்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, வங்கி மற்றும் அஞ்சலகங்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம் உள்ளிட்ட அடையாள அட்டை நகலை அளித்து இணைத்துக் கொண்டனர். இந்த முகாமில் 180 பேரின் ஆதார் எண்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.