வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைவு படுத்துவதற்காகவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களை சேர்ந்த பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாக தங்களது பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களிடம், அவர்களின் வீடு தோறும் சென்று 6 பி படிவத்தில் ஆதார் எண்ணை பெற்று இணைத்திட இந்த சிறப்பு முகாமில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாமினை முழுமையாக பயன்படுத்தி, தங்களது ஆதார் எண்ணினை தாமாகவே முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளுமாறும் இப்பணியினை விரைவாக முடித்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.