கடலூர் மாவட்டத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 107 இடங்களில் சிறப்பு முகாம் டிசம்பர் 31-ந் தேதி வரை நடக்கிறது
கடலூர் மாவட்டத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 107 இடங்களில் சிறப்பு முகாம் அடுத்த மாதம்(டிசம்பர்) 31-ந் தேதிவரை நடக்கிறது.
ஆதார் எண் இணைப்பு
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர் பிரிவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், வழிசோதனைபாளையம், புதுப்பாளையம், முதுநகர், நல்லாத்தூர், புதுக்கடை, ஆலப்பாக்கம் உள்ளிட்ட 16 இடங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் திரண்டு சென்று, தங்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதுவரை கடலூர் பிரிவில் 7,800 பேர், மின்இணைப்பு எண்ணுடன், தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
107 இடங்களில் சிறப்பு முகாம்
இதேபோல் நேற்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 107 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 27 ஆயிரத்து 600 பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த முகாம் அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும் என்றும், அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்திலும், பூதாமூர் துணை மின் நிலையம் வளாகத்தில் செயல்பட்டு வரும் அர்பன்/ கண்டியாங்குப்பம் பிரிவு அலுவலகத்திலும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த தகவலை விருத்தாசலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.