கல்லூரி மாணவிகளின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பித்த கல்லூரி மாணவிகளின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்
விழுப்புரம்
சிறப்பு முகாம்
விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பித்த முதலாமாண்டு கல்லூரி மாணவிகளின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர், பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்லூரி மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உயர்கல்வி படிக்கும் 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
3,222 மாணவிகள் விண்ணப்பம்
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஆகஸ்டு மாதம் முதல் 56 கல்லூரிகளை சேர்ந்த 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிக்கும் 4,174 மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 70 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்டத்தில் 1.10.2022 அன்றிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் 19 கல்லூரிகளை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் முதல்கட்டத்தில் விண்ணப்பிக்க தவறிய 3,222 மாணவிகள் தற்போது விண்ணப்பித்துள்ள நிலையில் 1,046 மாணவிகளின் வங்கிக்கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என தெரியவந்ததன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவிகள் படிக்கும் கல்லூரிகளிலேயே வங்கிக்கணக்கில் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது அப்பணி நடைபெற்று வருகிறது.
15 கல்லூரிகளில்
அதன்படி இன்றைய தினம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, பவ்டா கலை அறிவியல் கல்லூரி, எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை (அதாவது இன்று) ஸ்ரீரங்கபூபதி கல்விக்குழுமம் மற்றும் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே மாணவிகள் தங்களுடைய ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டு். இந்த பணிகள் முடிந்த பின்னர் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், கனரா வங்கி மேலாளர் லிங்கராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சுஜிதா, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.