மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவமான அடையாள அட்டைக்கான விண்ணப்பம் 180 பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டன. இதில் புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை 95 பேருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் சார்ந்த விண்ணப்பம் 30 பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் தலைமையிலான எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் முட நீக்க வல்லுனர் ராமன், செயல் திறன் உதவியாளர் பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு முகாம் நடைபெற்ற வளாகத்தில் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் பயனாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மதியம் 3 மணிக்கு மேல் முகாம் தொடர்ந்து நடைபெற்றதால் மதிய உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளும் இல்லாமல் பயணிகள் சிரமப்படுவதை அறிந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர் அதன்பிறகு பயனாளிகளுக்கு தேவையான உணவு பொட்டலங்கள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதுபோன்ற முகாம்கள் நடைபெறும்போது முகாம் நடைபெறும் வளாகத்தை தூய்மைப்படுத்தி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.