உழவன் செயலி மூலம்அரசு திட்டங்களை அறிந்து விவசாயிகள் பயன் பெற வேண்டும்கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் அரசு திட்டங்களை அறிந்து பயன் பெற வேண்டும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.

Update: 2023-02-12 18:45 GMT

சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனா் (பொறுப்பு) சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண் கருவிகள், தார்பாய், பேட்டரி மருந்து தெளிப்பான், தென்னங்கன்றுகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்துறை மூலம் காய்கறி விதைகள் மற்றும் திசுவாழை ஆகியவற்றை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மானிய திட்டங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட 16 துறைகளின் மூலம் 171 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் ஆண்ட்ராய்டு செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கி, அரசின் மானியத்திட்டங்கள், வேளாண் இடுபொருட்கள் முன்பதிவு, பயிர்காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு விவரம், விதைகள் இருப்பு விவரம், வேளாண்மை எந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் வருகை போன்ற விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ளலாம்.

விவசாயிகள் பயன்பெறவேண்டும்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் ஜிப்சம், ஜிங்க்சல்பேட் மற்றும் வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. நெல்லுக்கு பின் உளுந்து பயிர்சாகுபடி திட்டம், சர்வதேச சிறுதானிய ஆண்டு சிறுதானிய சாகுபடி திட்டம், உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்ப முறையை உழவன் செயலி மூலம் அறிந்து அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினாா்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், உதவி செயற்பொறியாளர் கணேசன், கால்நடை உதவி மருத்துவர் கார்த்திகேயன், தோட்டக்கலை உதவி இயக்குனர் உமா, வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) விஜயலட்சுமி, வேளாண்மை அலுவலர் பொன்னுராசன், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்