செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி
காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன்அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சுதந்திர தினவிழாவையொட்டி இந்திய அஞ்சல்துறை சார்பில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 7.5லட்சம் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர், பாதுகாவலர் கணக்கை ரூ.250 செலுத்தி அனைத்து தபால் அலுவலகங்களிலும் தொடங்கலாம். மேலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250-ம், அதிக பட்ச தொகையாக ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரையும் செலுத்தலாம். தற்போது 7.6 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. கணக்கில் செலுத்தும் தொகை, வட்டி மற்றும் முதிர்வு தொகை என அனைத்திற்கும் வருமான வரிவிலக்கு பெறலாம். பெண் குழந்தைகள் 10-ம் வகுப்பு படித்த பின்னரோ அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்பிற்காக 50 சதவீத தொகையை பெறலாம். இதுதவிர பெண் குழந்தையின் திருமணத்தின் போதோ அல்லது கணக்கு தொடங்கி 21 ஆண்டுகளுக்கு பின்னர் முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். எனவே இந்த முகாமில் பெண் குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி பயன்ெ்பறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.