280 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்- கலெக்டர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் 280 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-08 19:21 GMT

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் 280 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கால்நடை விழிப்புணர்வு முகாம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை மருத்துவ வசதி கிடைக்கபெறாத கிராமங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள கால்நடைகளின் நலன் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்த ஆணை பிறப்பித்துள்ளார். அதன் பேரில் 2022-2023-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

280 இடங்களில் முகாம்கள்

அதன்படி ஒரு ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 280 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2023) மார்ச் முடிய நடத்தப்பட உள்ளது.

முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சை மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

நடத்தப்படும் இடங்கள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் நாள், இடம், அந்தந்த பகுதியில் கால்நடை உதவி மருத்துவர்களால் அறிவிக்கப்படும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முகாம் நடைபெறும் இடங்களுக்கு தங்களது கால்நடைகளை தவறாது அழைத்துச்சென்று பயன்பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்