விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

இன்று மாலையில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-08-30 04:56 GMT

கோப்புப்படம் 

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் வேலைசெய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும், முகூர்த்த நாளாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திருமணங்கள், சுபகாரியங்கள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. ஏ.சி. படுக்கை பெட்டியிலும் இடமில்லை. இதனால் காத்திருப்போர் பட்டியல் 300-க்கு மேலாக உள்ளது. நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை மட்டுமின்றி பிற நகரங்களிலும் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை அரசு விடுமுறையாகும். அதனால் இன்று மாலையில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் தமிழகத்தின் பல்வேறு நகர் புறங்களுக்கு தினமும் 2200 பஸ்கள் இயக்கப்படுகிறது. அ

ந்த வகையில் இன்று வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தேவையை சமாளிக்க சிறப்பு பஸ்கள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை கூட்ட நெரிசலை சமாளிக்க தேவையான அரசு பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம். வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா தொடங்கி இருப்பதால் வேளாங்கண்ணிக்கும் தேவையான அளவு பஸ்களை இயக்குகிறோம். புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ரெயில்களில் இடம் இல்லாததால் அரசு பஸ்களை நம்பி பயணம் செய்ய மக்கள் கூடுவார்கள். அதற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டுள்ளனர். மாலையில் இருந்து வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கோயம்பேடு பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்