வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் தேர் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள்
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் தேர்திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில் தேர் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நெரிசலின்றி, தரிசனம் செய்யவும், அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடந்தது. காட்பாடி ஒன்றியக்கு குழு தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
சிறப்பு பஸ்கள்
இதில் மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, தீயணைப்பு உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தேவையான சதிகள் செய்தி கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் விழா நாட்களில் வேலூர், ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் வேலூர் சப்-கலெக்டர் பூங்கொடி கலந்து கொள்ளாதது பக்தர்கள் மற்றும் உபயதாரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் மேல்பாடி சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, மேல்பாடி மின்சார துறை உதவி செயற்பொறியாளர் சரவணன், காட்பாடி தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசன், ராஜன், வனவர் ராஜன், மேல்பாடி வருவாய் ஆய்வாளர் சதீஷ் குமார், கிராமநிர்வாக அலுவலர்கள் குணராஜன், சின்னசாமி, விழா குழுவினர், உபயோதாரர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.