தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்

கீழ்வேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்;பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அறிவுறுத்தல்

Update: 2023-06-28 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் துாய்மை பணியாளர்களின் குழந்தைகள் கீழ்வேளூர் வட்டாரத்தில் உள்ள 8 பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 7 பேர் மற்றும் தற்காலிக ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அதிகாலையிலேயே தினமும் பணிக்கு சென்று விடுவதால் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு வருகைப்பதிவு, கற்றல் திறன், உடல் நலம் ஆகியவற்றில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு ஏதேனும் சிறப்பு கவனம் தேவைப்பட்டால் அதனை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதுடன் கூடுதலாக செயல் அலுவலருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் முன்னேற்றம் பற்றி அறிய தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களை ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் சந்திக்க பேரூராட்சி திட்டமிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் இதர திட்டங்களில் சேர்த்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பேரூராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்