மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு அதிகாரி தகவல்
மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால் தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி இகேஒய்சி (விரல்ரேகை மூலம்) ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இந்த கணக்கிற்கு இருப்புத்தொகை எதுவும் கிடையாது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களிலும், DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவையின் மூலமாகவும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
சிறப்பு ஏற்பாடு
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை அணுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன் நகரங்களில் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளியமுறை வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டுமல்லாமல் நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகள், பிரதம மந்திரியின் கிசான் திட்ட பயனாளிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.