சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது. நடராஜ பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 6 அபிஷேக, ஆராதனைகளில் ஆருத்ரா தரிசனத்திற்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனி திருமஞ்சனம் ஆகும். ஆனி உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத்தன்று சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குறுந்தை மரத்தடியில் உபதேசம் செய்ததாக ஐதீகம்.
ஆனி திருமஞ்சனத்தையொட்டி நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜ பெருமான், சிவகாமி தாயாருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவிய பொடி, வில்வ பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப்பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான்- சிவகாமி தாயார் வீதி உலா திருக்காட்சி நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜ பெருமான் வீதி உலா நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் நடராஜர்- சிவகாமி தாயார் வீதி உலா காட்சி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான்-சிவகாமி தாயார் வீதி உலா நடைபெற்றது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. வீதி உலாவின்போது வீடுகள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு பக்தர்கள் தீபாராதனை செய்தனர். பின்னர் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மங்கல ஆரத்தி நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.