பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ஆடிப்பூரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆடிப்பூரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு அபிஷேகம்
தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆண்டுதோறும் எல்லா சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதன்படி நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தண்ணீர், எண்ணெய், இளநீர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நுழைவுவாயில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், 108 சிவலிங்கங்கள், நந்தி, முருகன், வருணபகவான், சண்டீகேஸ்வரர், அய்யனார் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
வடபத்ர காளியம்மன்
பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சை வடக்குஅலங்கத்தில் உள்ள வடபத்ர காளியம்மன், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன்கோவில், வல்லம் ஏகவுரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.