தீ விபத்தில் சேதமடைந்த ஆய்வகத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

வள்ளியூர் அரசு பள்ளியில் தீ விபத்தில் சேதமடைந்த ஆய்வகத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.

Update: 2023-08-12 23:26 GMT

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் விலங்கியல் ஆய்வக கட்டிடத்தில் நேற்று காலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால், பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சில மாணவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் விலங்கியல் ஆய்வக கட்டிடத்தில் இருந்த அனைத்து உபகரணங்களும் தீக்கிரையாகின. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். தீ விபத்தில் சேதமடைந்த ஆய்வகத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வுஇந்த நிலையில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி ஆய்வக கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி விலங்கியல் ஆய்வகத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து நிகழ்ந்து தீக்கிரையானது. இதுகுறித்து காவல் துறை மூலம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். தீக்கிரையான விலங்கியல் ஆய்வகத்தை புதுப்பிக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தேவையான நிதி வழங்கி விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு போதிய அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினாலும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. நாங்குநேரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். மற்ற மாநிலங்களில் குற்றங்களை வேடிக்கை பார்ப்பது போன்று தமிழக அரசு கிடையாது.

பலமான முதல்-அமைச்சர் இருக்கின்ற காரணத்தினால் எந்த தவறுகள் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக தமிழகத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விரட்டப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தவறான தகவல்களை சிலர் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தினர். எனினும் 48 மணி நேரத்திற்குள் உண்மை குற்றவாளிகளை தமிழக முதல்-அமைச்சர் கண்டுபிடித்து தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி வடமாநிலத்தவர்களுக்கு வாழ்வளித்தார்.

கடந்த 2½ ஆண்டு காலத்தில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தமிழகத்திற்கு தொழில் செய்ய வருகின்றனர். தமிழகம் தொழில் வளத்தில் 14-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு தற்போது வந்துள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பில், தொழில் வளத்தில் முன்னேறி இருக்கிறது.

தமிழகத்தில் அமைதியான சூழல் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. இதனை சீர்குலைப்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை இந்த அரசு எடுக்கும். யார் தவறுகள் செய்திருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். மணிப்பூரை போல தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தலைமை ஆசிரியை சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன், வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்