தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் பேட்டி
“தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகளை கட்டுப்படுத்த போலீஸ் சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது” என்று தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் கூறினார்
"தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகளை கட்டுப்படுத்த போலீஸ் சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது" என்று தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் கூறினார்.
அஸ்ரா கார்க் வருகை
நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியில் கோவில் பூசாரி உள்பட 2 போ் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் பேட்டையில் நம்பிராஜன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் அஸ்ரா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் சாதிய ரீதியிலான கொலை குற்றங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்க டி.ஐ.ஜி. மற்றும் மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதிய ரீதியிலான பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு இதுவரை 204 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 184 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடப்பாண்டில் மட்டும் 985 பேர் பிடியாணைைய மீறி செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரூ.15 கோடி
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் தென் மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. ரூ.15 கோடி வரை வங்கி கணக்கில் உள்ள பணம் முடக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபட்டாலும் கோர்ட்டு மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். சீவலப்பேரியில் மாயாண்டி என்பவர் கொலையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.