தென்பெண்ணையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்

தென்பெண்ணையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். மேலும் ஒருவரை தேடு்ம் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-12-14 18:45 GMT


திருவெண்ணெய்நல்லூர், 

விக்கிரவாண்டி அருகே உள்ள அத்தியூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜாமணி மகன் ரகு (வயது 30), குருநாதன் மகன் காத்தவராயன் (32). இதேபோல் மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கார்த்திகேயன் (38). உறவினர்களான இவர்கள், கட்டிட தொழில் செய்து வந்தனர்.

12-ந்தேதி இவர்கள் 3 பேரும், திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமத்தில் உள்ள தங்களது உறவினரின் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜைக்காக சென்றனர். அங்கு பூஜைகள் முடிந்த நிலையில், மாலை 6 மணிக்கு தங்களது வீட்டுக்கு திரும்பினர். அப்போது, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூர் - அருளவாடி இடையே செல்லும் தென்பெண்ணை ஆற்றை அவர்கள் கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது, ஆற்று வெள்ளத்தில் 3 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் கார்த்திகேயனை கிராம மக்கள் மீட்டனர். ஆனால், ரகு, காத்தவராயன் ஆகிய இருவரையும் தேடும் பணியில் நேற்று 3-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

இந்த பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, மீட்பு பணியை துரிதப்படுத்தினார். அப்போது, திண்டிவனத்தில் இருந்து மேலும் ஒரு படகு மூலம் 10 பேர் கொண்ட குழுவையும் தேடும் பணியில் ஈடுபடுத்த கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

அப்போது, அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், தாசில்தார் பாஸ்கரதாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சாரங்கபாணி உள்பட பலர் உடனிருந்தனர்.

உடல் மீட்பு

இதற்கிடையே, நேற்று மாலை மரகதபுரம் பகுதியில் காத்தவராயனை பிணமாக, மீட்பு படையினர் மீட்டு வந்தனர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகுவை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்