தென் கொங்குப்பகுதியில் சேர, சோழர்கள் மட்டுமல்லாமல் பாண்டியர்கள் உட்பட மூவேந்தர்களும் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கல்வெட்டு சான்றுகள்
மன்னர்கள் ஆட்சி செய்த காலம், அவர்கள் ஆண்ட பகுதி, வழங்கிய தானங்கள் உள்ளிட்ட பல சரித்திர ஆதாரங்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. அந்தவகையில் கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு இறுதி வரையிலும் கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, கரைவழிப் பகுதியில் கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய பகுதிகளில் வீரசோழன், வீரசோழ கலமூர்க்கன், விக்கிரம சோழன், அபிமான சோழ ராஜாதிராஜன், உத்தம சோழ வீரநாராயணன், முதல்குலோத்துங்க சோழன், வீரராசேந்திர சோழன், இரண்டாம் விக்கிரம சோழன் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏராளமாக உள்ளது.
அமரபுயங்கீசர் கோவில்
மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதி மட்டும் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் எனும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் கொண்டதாக உள்ளது. அத்துடன் அதற்கு ஆதாரமான கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. மேலும், கி.பி. 960 முதல் 980 வரை அமரபுயங்கன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் தான் சோமவாரப்பட்டி சிவனியத்தலம் கற்கோயில் உருவாக்கப்பட்டதால் அம்மன்னனுடைய பெயரில் அமரபுயங்கீசன் என்னும் பெயரில் அந்தக் கோயில் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.அதுபோல சிஞ்சுவாடி பகுதியில் ஒரு கல்வெட்டு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ விக்கரம சோழன் தெவற்கு பங்குனி எனவும், ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.இதில் பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்து இருக்கின்றன.
இருந்தாலும் அதில் உள்ள, தெரியும் கல்வெட்டு எழுத்துக்களை வைத்துப் பார்த்தால் வீரபாண்டியன், ஆட்சியாண்டைக் குறிப்பதாகவும், நில தானம் செய்ததற்கான கல்வெட்டெழுத்துக்கள் என்பது தெரிய வருகிறது.சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டெழுத்து என்பதால் இது பிற்காலப் பாண்டியர்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டுக் கல்வெட்டாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாண்டியர் ஆட்சி
தென்கொங்குப் பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி என்றும், இதற்கு ஆழமான வரலாறுகள் இருப்பதையும் கொழுமம் பகுதியை சேரர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் இருக்கும் போது, கடத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சோழர் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இருக்கும் போது, பாண்டியர்களும் கொங்குப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு இந்தக் கல்வெட்டெழுத்துகள் உறுதியான சான்றுகளாக இருக்கின்றன.இந்தத் தகவலை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முனியப்பன், வரலாற்றுப் பேராசிரியர் மதியழகன், வரலாற்று ஆசிரியர் ராபின், வி.கே. சிவகுமார், அருட்செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.