திருச்செந்தூர் அமலிநகரில் விரைவில்தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும்:கலெக்டர் செந்தில்ராஜ் திட்டவட்டம்

திருச்செந்தூர் அமலிநகரில் விரைவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-14 18:45 GMT

திருச்செந்தூர் அமலிநகரில் விரைவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என்றும், இது தொடர்பாக பரபரப்பம் வதந்திகளை மீனவர்கள் நம்பவேண்டாம் என்றும் கலெக்டர் செந்தில்ராஜ் திட்டவட்டமாக கூறினார்.

இது குறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

அமலிநகர்

திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் போராட்டம் அறிவித்த உடன் நான் அவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்தேன். அவர்களிடம் பேசி குறைகளை நிவர்த்தி செய்து தருவோம் என்றேன். இதேபோன்று கடந்த முறை பிப்ரவரி மாதம் 10 நாட்களுக்கு மேலாக அவர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக அங்கு சென்று படகுகளை பார்வையிட்டு அவர்களிடம் பேசி உத்தரவாதம் கொடுத்துவிட்டு வந்தேன்.

கடந்த 2022 ஏப்ரல் மாதம் மீன்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் ரூ.58 கோடி செலவில் அங்கே தூண்டில் வளைவு அமைத்து தரப்படும் என்று அறிவித்தார். அந்த மாதத்திலேயே பசுமை தீர்ப்பாயம் ஒரு ஆணை வெளியிட்டு உள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பானை 2019 அடிப்படையில் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் தயாரிக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன் அடிப்படையில் கடற்கரையோர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்து இருந்தது. இதனால் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை திட்டத்தை தயாரித்து அரசிதழில் வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வதந்தியை நம்ப வேண்டாம்

அதே நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது வராது என்று சிலர் கூறி வருகின்றனர். இது முழுக்க முழுக்க பொய். மீனவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு இது தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே அறிவித்தபடி விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.

விரைவில் தூண்டில் வளைவு பாலம்

அமலிநகர் மக்கள் என்னுடன் பேசும்பட்சத்தில் அவர்களுக்கு அனைத்து உத்தரவாதங்களையும் தர தயாராக இருக்கிறேன். அமலிநகரில் கண்டிப்பாக தூண்டில் வளைவு அமைக்கப்படும். ஆனால் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் தயாரித்து திட்டங்களை அமல்படுத்த சற்று காலஅவகாசம் ஏற்படும். கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் பணிகள் முடிந்த உடன், அமலிநகரில்தான் முதல் தூண்டில் வளைவு கொண்டு வர உள்ளோம்.

இதே போன்று வருகிற 18-ந் தேதி ராமேசுவரத்தில் மீனவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 789 பேருக்கு பட்டா, மீனவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்