முதியவர் கொலையில் மகன் கைது; சொத்துக்காக கொன்றது அம்பலம்

புளியங்குடி அருகே முதியவர் கொலையில் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-08 14:49 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே முதியவர் கொலையில் மகனை போலீசார் கைது செய்தனர்.

முதியவர் கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெல்கட்டும்செவல் அடுத்துள்ள பச்சேரி மடத்து தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், மாடத்தி, முருகேஸ்வரி என்ற 2 மகள்களும், முத்துகுமார் (25) என்ற மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிய நிலையில் முத்துகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.

குடும்ப பிரச்சினை காரணமாக குடுமபத்தினரை பிரிந்து கடந்த 15 வருடங்களாக கருப்பையா தனியாக வசித்து வந்தார். மனைவி காளியம்மாள், மகன் முத்துக்குமாருடன் இலவங்குளத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு கருப்பையா தனது வீட்டில் அரிவாளால் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சொத்து பிரச்சினை

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கருப்பையாவுக்கும், அவரது மகன் முத்துக்குமாருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதுதொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பாக புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து முத்துக்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தனக்கு சொத்து தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், இலவங்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கருப்பையாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

மகன் கைது

இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் ரத்தம் படிந்த டி-சர்ட் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை தகுந்த ஆதாரத்தோடு கைது செய்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம், தனிப்பிரிவு காவலர் மருது பாண்டி மற்றும் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், துணை சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்