சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது
சொத்து தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே அம்மன்கொள்ளை மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மனைவி பவுனு (வயது 65). இவரது மகன் அய்யனார் (57). சம்பவத்தன்று இவர் தனது தாய் பவுனுவிடம் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார் தனது மகன் மணிகண்டனுடன் சேர்ந்து பவுனுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட பவுனுவின் மகள் பழனியம்மாள் மற்றும் பேத்தி கவுதமி (30) ஆகியோரையும் அவர்கள் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பவுனு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கவுதமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை கைது செய்தார். மேலும் மணிகண்டனை தேடி வருகிறார்.