வாகனங்களில் லிப்ட் கேட்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

வாகனங்களில் லிப்ட் கேட்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

Update: 2023-04-21 15:34 GMT

போடிப்பட்டி,

மடத்துக்குளம் பகுதியில் பள்ளி மாணவர்கள் வாகனங்களில் லிப்ட் கேட்டு பயணிப்பதால் அவர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

அரசு பஸ்கள்

மடத்துக்குளம் தாலுகா என்பது அதிக அளவில் கிராமங்கள் மற்றும் கிராமங்கள் சார்ந்த பகுதியாகவே உள்ளது. இங்கு பெருமளவு விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்படுகிறது. இதனால் 5- ம் வகுப்பு தாண்டி உயர் கல்வி கற்பதற்காக அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

ஆனால் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் அரசு பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பல அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

விழிப்புணர்வு

இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்கு பல கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து செல்கிறார்கள். ஆனால் தாமதமாக கிளம்பியவர்கள், நடக்கத் தயங்குபவர்கள் என பல மாணவ -மாணவிகள் வழியில் வரும் வாகனங்களில் லிப்ட் கேட்டு ஏறி பள்ளிக்கு செல்கின்றனர். அறிமுகமான நபர்கள் மட்டுமல்லாமல் அந்த வழியாக வரும் எந்த வாகனமாக இருந்தாலும் லிப்ட் கேட்கும் பழக்கம் ஒருசில மாணவ மாணவிகளிடம் உள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கார், சரக்கு வாகனங்கள் என அனைத்திலும் லிப்ட் கேட்டு ஏறுகின்றனர்.

இதனை ஒருசில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தலாம். மேலும் சரக்கு வாகனங்களில் மாணவர்கள் கூட்டமாக ஏறிச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் சிறுவர்களே இருசக்கர வாகனங்களை இயக்கவும் பெற்றோர் அனுமதிக்கின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்கு தாமதமாக செல்வதைத் தவிர்க்க உரிய நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். மேலும் அறிமுகமில்லாத நபர்களின் வாகனங்களில், அவர்களாகவே ஏற்றிச் செல்ல முன்வந்தாலும் ஏறக் கூடாது.சரக்கு வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யக்கூடாது என்பது குறித்து மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் பள்ளி, கல்லூரி நேரங்களில் லாப நோக்கம் கருதாமல் அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்