பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்
திருமங்கலம்
பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
பட்டமளிப்பு விழா
திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. 2020-21, 21-22-ம் கல்வியாண்டில் பயின்ற 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- என்னை போன்றவர்கள் மேடையில் நிற்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஆசிரியர்கள்தான். இந்த நாடு கொடுத்திருக்கிற கல்வி ஆற்றல்தான் நம்மையெல்லாம் பெரிய மனிதர்களாக ஆக்கி கொண்டிருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இன்று நாமெல்லாம் வசதியாக படித்து பட்டம் பெறும் வயதில்தான் நம் சுதந்திர போராட்ட வீரர்கள் சுதந்திர வேள்வியில் குதித்து சிறைச்சாலை தண்டனைகளை அனுபவித்தனர். அவர்களால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.
குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்
அதிகமாக புத்தகங்களை படியுங்கள். புத்தகங்களை படிக்க, படிக்கத்தான் நம் வாழ்க்கை முறை தெளிவாகும். தற்போது இந்தியாவை சேர்ந்த திறமை வாய்ந்தவர்கள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க பிரதமர் இன்று புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறார். வேறொரு மொழியை கற்றுக் கொண்டால் தமிழ் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பலமொழிகள் கற்கும் பொழுதுதான் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று தெரியும்.
பாரதி பல மொழிகளை கற்றுதான் தமிழ் உயர்ந்தது என்று சொன்னார். ஆனால் இன்று தமிழை மட்டும் கற்றுக்கொண்டு தமிழை பாதுகாக்கிறோம் என்று சொல்பவர்கள், பிற மொழியை கூட அனுமதிக்காதவர்கள் இன்று சமூக நீதியை பற்றி பேசி வருகிறார்கள். இங்குமொழி, தொழில், விஞ்ஞானம் எல்லாம் அரசியலாக்கப்படுகிறது.
பிறமொழி கற்றுக்கொள்வதில் தவறில்லை
மாணவர்கள் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வரத்தான் நாடு முன்னேற்றம் அடையும். எதையுமே அரசியல் ஆக்காமல் ஒரு திட்டம் வந்தால் அதை அலசி ஆராய்ந்து நல்லவற்றை எடுத்து கொள்ளவேண்டும். புதிய கல்வி கொள்கையை வரவேற்கும் நிலை உங்களிடம் இருக்க வேண்டும். 6 மாதம் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும் அப்போதுதான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி வரும். அதைத்தான் பிரதமர் சொல்கிறார். ஆரம்பத்தில் இருந்து தாய்மொழி கல்வியை கொடுங்கள் என்றார்.
தமிழை மட்டும் ஆட்சி மொழியாக கொண்டு செயல்படுவேன் என்று சொல்பவர்கள் தாய் மொழியை கட்டாயமாக்கவில்லை. வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள். செல்போனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். யோகா போன்ற நல்ல கலைகளை நம் நாட்டு கலைகளை கற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேராசிரியர் ராம.சீனிவாசன் பங்கேற்றனர்.
முன்னதாக கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, கல்லூரி தலைமை அதிகாரி மற்றும் செயலாளர் ஷகிலா ஷா வரவேற்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் வெண்ணிலா நன்றி தெரிவித்தார். முன்னாள் கல்லூரி முதல்வர் நவராஜ் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.