கோவில்களில் சோமவார விழா-பிரதோஷ வழிபாடு
கோவில்களில் சோமவார விழா-பிரதோஷ வழிபாடு நடந்தது.
பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேசுவரி கோவிலில் கோவில் திருப்பணிகள் விரைவில் தொடங்கி நடக்க வேண்டியும், கார்த்திகை 3-வது சோமவாரத்தை முன்னிட்டும் நேற்று 108 சங்கு அபிஷேகம் நடந்தது. இதனையொட்டி தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே கலசம் ஸ்தாபனத்துடன் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், ருத்ரஜபம், பஞ்சாட்சர ஜபவேள்வி நடந்தது. யாகசாலை பூஜையை தொடர்ந்து பக்தர்கள் சிவனடியார்கள் கடங்களுடன் புறப்பட்டு 108 சங்குகளுடன் பிரகாரவலம் வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், நந்திபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, மூலவருக்கும், நந்திபெருமானுக்கும் மகாதீபாராதனை நடந்தது. சிறப்பு யாகம் மற்றும் சங்கு பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர், சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அரவிந்தன், செயல் அலுவலர் ராஜதிலகம் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி, பஞ்சநதீஸ்வரர் கோவிலில் சோமவார விழாைவயொட்டி நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் குரும்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் சிவசுப்ரமணிய குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூரில் உள்ள விருத்தாம்பிகை உடனுறை விருத்தாசலேஸ்வரர் கோவிலிலும், வாலிகண்டபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை சோமவார விழாவை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் வாலிகண்டபுரம், கீழப்புலியூர், மங்களமேடு, எளம்பலூர், செங்குணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.