சமரச பேச்சுவார்த்தையில் 2 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச பேச்சுவார்த்தையில் 2 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-04 18:45 GMT

ரூ.20 ஆயிரம் இழப்பீடு

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் வசித்து வருபவர் நவலடி. இவரது மகன் செந்தில்குமரன். இவர் புேனவில் உள்ள தனது பெற்றோர் சொந்த ஊர் திரும்ப ரெயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தபால் புேனவுக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அது அவரது பெற்றோரை சென்றடையவில்லை. புகார்தாரர் அனுப்பிய தபாலும் அவருக்கு கூரியர் நிறுவனத்தால் திரும்ப வழங்கப்படவும் இல்லை.

இந்த சேவை குறைபாட்டிற்காக கூரியர் நிறுவனம் மீது செந்தில்குமரன் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் கூரியர் நிறுவனம் சார்பில் நடந்த தவறுக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம் புகார் தாரருக்கு வழங்கப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வங்கி மீது புகார்

கோவை போத்தனூரில் வசித்து வருபவர் ஜம்புநாதன் (65) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றில் வீட்டுக் கடனை பெற்று உள்ளார். இந்தநிலையில் அதே வங்கியில் தாம் வைத்திருந்த டெபாசிட் பணத்தை எடுத்து கடனை முடித்துக் கொள்ளுமாறு வங்கிக்கு கடிதம் கொடுத்து உள்ளார். ஆனால் வங்கி 5 மாத காலம் தாமதம் செய்து கடன் கணக்கை முடித்து உள்ளது.

இதனால் தமக்கு வட்டி இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது என்று வங்கியின் மீது கடந்த 2018-ம் ஆண்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நேற்று புகார்தாரருக்கும், வங்கி அலுவலருக்கும் இடையே நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையில் ஜம்பு நாதனுக்கு ஏற்பட்ட வட்டி இழப்பு தொகை ரூ.5 ஆயிரம், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கின் செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.20 ஆயிரத்தை 15 நாட்களுக்குள் தருவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்ட 2 வழக்குகளிலும் சமரச ஒப்பந்தத்தை புகார்தாரர்களுக்கும், எதிர் தரப்பினர்களுக்கும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் வழங்கினார். பேச்சுவார்த்தைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மற்ற 6 வழக்குகளில் சமரசம் ஏற்படாததால், அடுத்த சுற்று சமரச பேச்சுவார்த்தைக்காக அவை ஒத்திவைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்