1,396 வழக்குகளில் ரூ.6.92 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,396 வழக்குகளில் ரூ.6 கோடியே 92 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

Update: 2022-06-26 16:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,396 வழக்குகளில் ரூ.6 கோடியே 92 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஆர்.சக்திவேல் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, நிரந்தர மக்கள் நீதி மன்ற தலைவர் வேல்முருகன், தலைமை குற்றவியல் நடுவர் ராஜ சிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், சிறப்பு சார்பு நீதிபதி இந்துலதா மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1,396 வழக்குகள்

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டு 4,869 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,396 வழக்குகளில், ரூ.6 கோடியே 92 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பில் சமரசமாக தீர்வு காணப்பட்டது.

இதேபோன்று ஊத்தங்கரையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி அஷ்பாக்அஹமத், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அமர்ஆனந்த், குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் பிரியதர்ஷினி மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்