போர் வெற்றி தூணுக்கு வீரவணக்கம் செலுத்திய ராணுவ வீரர்கள்
டச்சு படையை வென்று 282 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி குளச்சலில் போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
குளச்சல்:
டச்சு படையை வென்று 282 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி குளச்சலில் போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
டச்சுபடையினர் படையெடுப்பு
குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகம் சிறந்த வர்த்தக தலமாக விளங்கியது. இந்த துறைமுகத்தை கைப்பற்ற டச்சு படையினர் குளச்சலை நோக்கி படையெடுத்தனர். திருவிதாங்கூர் படையினருக்கும் டச்சு படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது.
2 மாதங்கள் நடந்த இந்த சண்டையில் 1741-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி திருவிதாங்கூர் படை டச்சுபடையை வென்றது.
வெற்றி தூண்
இந்த போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூணை நிறுவினார்.
இந்த வெற்றித்தூணில் ஆண்டுதோறும் ஜூலை 31-ந் தேதி மெட்ராஸ் ரெஜிமெண்ட் 2-வது பட்டாலியன் (திருவனந்தபுரம் பாங்கோடு) ராணுவ வீரர்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். டச்சு படையை வெற்றி பெற்று இன்று (திங்கட்கிழமை) 282-வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி மெட்ராஸ் ரெஜிமெண்ட் 2-வது பட்டாலியன் வீரர்கள் நேற்றுமுன்தினம் குளச்சலுக்கு வந்து போர் வெற்றித்தூணை சுத்தம் செய்து முன்னேற்பாடு பணிகளை செய்தனர்.
வீர வணக்கம்
தொடர்ந்து வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சியில் லெப்டினட் கர்னல் ரித்தீஸ் பாஜ்பாய், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், நகர்மன்ற தலைவர் நசீர், துணை பங்குத்தந்தை ஷாஜன், முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக உதவி இயக்குனர் சீனிவாசன் மற்றும் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேல் குமார், சங்கீதா அன்பு ஜூலியட், ஆம் ஆத்மி கட்சி சார்பில் குளச்சல் தொகுதி தலைவர் ஸ்டாலின் பனிமயம், தென் மண்டல தலைவர் ரமேஷ், மாவட்ட தலைவர் ஷெல்லி, கிள்ளியூர் தொகுதி தலைவர் பிரடி மற்றும் குமரி ஜவான்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வெற்றி தூணுக்கு மரியாதை செலுத்தினர்.