விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள் வழங்க இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

Update: 2022-06-26 17:15 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.43.556 கோடி மானியம்

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீதம் மானியத்தில் அமைக்கும் திட்டம் 2021-2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2 ஆயிரம் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்துக்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருக்க வெண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

உறுதிமொழி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புகோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. சூரிய சக்தி பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட வேளாண்மைப் பொறியியல் துறை உட்கோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளிக்க வேண்டும்.

தடையில்லா சான்று

வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கீரிட் காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்று இணைத்திட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் அருகிலுள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் தகவல்களை pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்