வனத்துறை ஊழியர் வீட்டில் பிடிபட்ட 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள்
சின்னாளப்பட்டி அருகே வனத்துறை ஊழியர் வீட்டில் 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள் பிடிபட்டன.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே அம்பாத்துரை காமாட்சி நகரை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 62). ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர். இவர் அப்பகுதியில் ஓடுகள் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முகப்பு பகுதியில் ஓடுகளின் இடுக்கில் பாம்பு ஒன்று நெளிவதை நம்பிராஜன் பார்த்தார். உடனே இதுகுறித்து அவர், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது நம்பிராஜன் வீட்டின் ஓடுகளுக்குள் மறைந்து இருந்த ஒரு பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது அடுத்தடுத்து ஓடுகளின் இடுக்குகளில் மேலும் 5 பாம்புகள் இருந்தன. இதனை பார்த்த தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் நம்பிராஜன் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த 5 பாம்புகளையும் தீயணைப்பு படைவீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் 6 பாம்புகளையும் சாக்குப்பைகளில் அடைத்தனர்.
பிடிபட்ட 6 பாம்புகளும் கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்பும் 3 அடி முதல் 5 அடி வரை நீளம் கொண்டதாக இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த 6 பாம்புகளையும் தீயணைப்பு படையினர், கன்னிவாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பாம்புகளை காட்டுப்பகுதிக்குள் கொண்டுபோய்விட்டனர். ஒரே வீட்டில் 6 பாம்புகள் பதுங்கியிருந்த சம்பவம் அம்பாத்துரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.