அலுவலர்களை அலற விட்ட பாம்பு

பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு அலுவலர்களை அலற விட்டது. 2 மணி நேரம் தேடியும் அந்த பாம்பு பிடிபடவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2022-11-24 18:47 GMT

பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு அலுவலர்களை அலற விட்டது. 2 மணி நேரம் தேடியும் அந்த பாம்பு பிடிபடவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சார்பதிவாளர் அலுவலகம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தை சுற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் நிலையம், கோர்ட்டு, சார்நிலை கருவூலம், தீயணைப்பு நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அலுவலகங்களுக்கு பாபநாசத்தை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினசரி வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக அந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.

பாம்பு புகுந்தது

இந்த பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் நேற்று காலையில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அலுவலகத்துக்குள் பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதைப்பார்த்து அங்கிருந்த அலுவலர்கள் அலறி அடித்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று அங்கு உள்ள அறைகள் முழுவதும் தேடினர்.

பாம்பு எங்கே? பாம்பு எங்கே? என சுமார் 2 மணி நேரம் தேடியும் பாம்பு பிடிபடவில்லை. அறைகளில் கோப்புகள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் என அலுவலகம் முழுவதும் தேடியும் பாம்பை காணவில்லை.

பணிகள் பாதிப்பு

பாம்பு பிடிபடாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பாம்பு புகுந்ததால் அலுவலகத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக பணிகள் பாதிக்கப்பட்டது. பாம்பு பிடிபடாததை தொடர்ந்து அலுவலக பணிகள் மீண்டும் தொடர்ந்து நடந்தன.

பாம்பு பிடிபடாததை தொடர்ந்து நேற்று முழுவதும் ஊழியர்கள் பீதியிலேயே தங்கள் பணியை தொடர்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்