வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
நாகை வடக்கு பால்பண்ணைச்சேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சிவகணேசன். மருமகள் பிரியதர்ஷினி. இவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.இவருடைய வீட்டின் அருகே கருவேல முட்களும், மூங்கில் மரங்களும் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அங்குள்ள மூங்கில் தோட்டத்தில் இருந்து 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று ராஜேந்திரன் வீட்டில் உள்ள கோழி கூட்டுக்குள் புகுந்தது. கூட்டில் கோழி அடைகாத்த முட்டைகளை விழுங்கிய பாம்பு அங்கிருந்து நகர முடியாமல் கூட்டுக்குள்ளையே பதுங்கி இருந்தது. அப்போது கோழி சத்தம் போட்டதை கேட்ட ராஜேந்திரனின் மருமகள் பிரியதர்ஷினி அங்கு சென்று பார்த்தபோது நல்ல பாம்பு படம் எடுத்து சீறியதைக் கண்டு அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று நவீன கருவி மூலம் நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.