மகனை கடித்த பாம்பை உயிருடன் கொண்டு வந்த தாய்
போச்சம்பள்ளி அருகே மகனை கடித்த பாம்பை உயிருடன் தாய் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே மகனை கடித்த பாம்பை உயிருடன் தாய் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு கடித்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பூவரசன் (வயது 17). இவர் நேற்று மாட்டு தொழுவத்தில் இருந்து சாணம் மற்றும் குப்பைகளை அள்ளி அருகில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டினார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளமுள்ள குட்டி பாம்பு பூவரசனை கடித்தது.
இதில் வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு அவருடைய தாயார் கோமதி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பூவரசனை கடித்த பாம்பு குப்பைக்குள் ஊர்ந்து சென்றது. பாம்பு குட்டியாக இருந்ததால் அந்த பகுதியில் திரண்டு இருந்தவர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்தனர்.
தீவிர சிகிச்சை
பின்னர் அவர்கள் பூவரசனை மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது பூவரசனை கடித்த பாம்புடன், அவருடைய தாயார் கோமதி ஆஸ்பத்திரிக்குள் வந்தார்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்த பாம்பை டாக்டர்கள் பார்த்தனர். அதன்பிறகு அந்த குட்டி பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.