112 தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக பாலக்கோடு ஒன்றியத்தில் 112 தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

Update: 2022-09-04 17:05 GMT

தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக பாலக்கோடு ஒன்றியத்தில் 112 தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

"முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்" என்ற திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக பாலக்கோடு ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

"முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்" தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு முதற்கட்டமாக பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 112 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த சுமார் 6,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சூடான சமைத்த, சத்தான மற்றும் சுவையான காலை உணவு வழங்கப்பட உள்ளது.

உணவு வகைகள்

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஊராட்சி தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியோரை கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 112 தொடக்கப்பள்ளிகளிலும் திங்கட்கிழமை கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை ராகி புட்டு, தேங்காய் மற்றும் (நாட்டு) சர்க்கரை, புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா காய்கறி கிச்சடி மற்றும் ரவா கேசரி ஆகிய உணவுகள் பள்ளி வேலை நாட்களில் காலை உணவு வகைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமேகலை, உதவி திட்ட அலுவலர் தமிழரசு மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்