குன்னத்தூர்,
குன்னத்தூர் அருகே மோட்டார்சைக்கிளை மிதித்து கீேழ தள்ளி விட்டு கணவருடன் வந்த பெண்ணிடம் 1½ பவுன்நகையை பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி
ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மனைவி ரதிதேவி (வயது 40). இந்த தம்பதி பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு கணவன்-மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை மாரிசாமி ஓட்டினார். பின் இருக்கையில் ரதிதேவி அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் பெருமாநல்லூர் குன்னத்தூர் ரோட்டில் ஓடத்தளாம்பதி அருகே வந்து கொண்டிருந்தது.
நகை பறிப்பு
அப்போது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்து இருந்த ஆசாமி, ரதிதேவி அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்தார். பின்னர் மாரிசாமி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை மிதித்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக தம்பதிகள் இருவரும் நம்பியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குப் பதிவு செய்து நகையை பறித்து சென்ற நபர்களை தேடி வருகிறார்.