பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்தல் - வாலிபர் கைது
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம்,
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிமாயன், ஏட்டு மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த வழியாக அதிக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது காரின் பின்பக்க இருக்கையில் ஒரு சாக்கு பையில் 240 கிராம் எடையில் தடை செய்யப்பட்ட 110 எண்ணிக்கை கொண்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. மேலும் இன்னொரு சாக்கு பையில் மற்றொரு ரகமான 99 கிராம் எடையில் 47 எண்ணிக்கை கொண்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. அதை கண்டபோலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
வாலிபர் கைது
இதனையடுத்து காரில் இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திருப்பரங்குன்றத்தில் உள்ள செங்குன்றத்தை சேர்ந்த முருகன் (வயது 29) என்று தெரியவந்தது. மேலும் அவர் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வாங்கி வந்து அதை மதுரையில் ரகசியமாக விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலையை பெங்களூருவில் இருந்து கொண்டு வருவதற்கு பயன்படுத்திய காரையும், 31 கிலோ புகையிலையையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.