ரேசன் அரிசி கடத்தல்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளில் தரமான உணவுப்பொருள்கள் வினியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. கடந்த மாதங்களில் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 13 ஆயிரத்து 8 வழக்கு பதிவுகள் செய்து, 13 ஆயிரத்து 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 113 பேர் குண்டர் சட்டம் மற்றும் அதற்கு இணையான சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ரூ.238 கோடி மதிப்பீட்டில் 2.86 லட்சம் டன் நெல் சேமிக்கும் கிட்டங்கிகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மதுரை தோப்பூர் உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்று வருகிறது. நியாய விலைக்கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டம் வருகிற 6-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.