விழுப்புரம் அருகே மினி லாரியில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தல் தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே மினி லாரியில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-14 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதி வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார், பனையபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரியை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் மினி லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

பறிமுதல்

பின்னர் அந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்ததில் அந்த லாரியினுள் 50 கிலோ எடை கொண்ட 60 சாக்கு மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் குட்டகம் பகுதியை சேர்ந்த விஜி என்பதும், இவர் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் விஜியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்