மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து சத்துணவு மாவு மூடைகள் கடத்தல்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து சத்துணவு மாவு மூடைகள் கடத்தப்பட்டது. அது மாட்டுத்தீவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து சத்துணவு மாவு மூடைகள் கடத்தப்பட்டது. அது மாட்டுத்தீவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது.
சத்துணவு மாவு மூடைகள் கடத்தல்
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் 2 கிலோ சத்துணவு மாவு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு மாவு உருண்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கன்வாடி மையங்களில் இருந்து சத்துணவு மாவுகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி 74-வது வார்டுக்கு உட்பட்ட பழங்காநத்தம் வடக்கு தெரு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் திறந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 25 கிலோ எடை கொண்ட 24 சத்துணவு மாவு மூடைகளை கடத்தி ஒரு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.
மாட்டுக்கு தீவனம்
அதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் படம் எடுத்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் மூலம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள மாடு வளர்க்கும் நபர் ஒருவருக்கு அங்கன்வாடி பணியாளர்களின் உறவினர்கள் உதவியோடு மாடுகளுக்கு தீவனமாக வழங்குவதற்காக கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பல ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளத்தில் வைரல்
மேலும் பழங்காநத்தம் பகுதியில் குழந்தைகளுக்கு சத்துணவு மாவு சரிவர வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு மாவு பாக்கெட்டுகளை மூடை மூடையாக கடத்தி சென்று மாடுகளுக்கு வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து அந்த பகுதி இளைஞர்கள் சிலர் அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு கடத்தல் குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.