லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை தேசியநெடுஞ்சாலை பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார், அந்த லாரியை வாகனம் மூலம் துரத்தி சென்று மடக்கினர். பின்னர் அந்த லாரியில் சோதனை செய்தபோது, அதில் 18 சாக்கு முட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து லாரியில் வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் ஏழுமலை (வயது 29), செல்வராசு மகன் கோபி (48) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கொட்டையூர், புதுக்கேணி, நின்னையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை நாமக்கல்லுக்கு கடத்தி சென்றபோது சிக்கியதும் தெரிந்தது. இதனைத்தொடர்ந்து ஏழுமலை, கோபி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.