மொபட்டுகளில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

மொபட்டுகளில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது.

Update: 2023-01-27 21:02 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவின்பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் தீவிரமான கண்காணிப்பு பணிகளை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், திருச்சி-கரூர் சாலை பகுதியில் முருங்கைப்பேட்டையில் இருசக்கர வாகனங்களில் 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.

2 வாலிபர்கள் கைது

அப்போது, முருங்கைப்பேட்டை மேலத்தெருவில் 2 வாலிபர்கள் மொபட்டுகளில் மூட்டைகளுடன் வந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுரேந்தர்பாபு (வயது 30), திருவானைக்காவலை சேர்ந்த மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது.மேலும், அவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அவற்றை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி மாட்டுத்தீவனத்துக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 மொபட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்