கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு கண்டெய்னரில் 2 டன் குட்கா கடத்தல் - 2 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் மாவட்டங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாகை,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது லாரியின் கண்டெய்னரில் ரகசிய அறை இருப்பதை கண்டறிந்த போலீசார், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 டன் குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு இவ்வாறு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நாகை மாவட்டம் பாலக்குறிச்சியைச் சேர்ந்த கவாஸ்கர் மற்றும் கண்டெய்னர் லாரியின் டிரைவரான கர்நாடகாவைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.